நாகர்கோவில், பிப்.12-
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து இன்று நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து நன்னடத்தைப் பிணை பெறுவதை உறுதி செய்ய வேண்டும், விபத்து ஏற்படுவதை தடுக்க வாகன சோதனையை அதிகப்படுத்தி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
காய வழக்குகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக சிவாலய ஓட்ட விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்தல் என பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட எஸ்பி வழங்கினார்.
மேலும் ஜனவரி மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக கோட்டார் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேடயம் வழங்கினார். அதனை நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன் மற்றும் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முக கார்த்திகேயன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



