நாகர்கோவில், ஜன. 12 –
குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகம் மற்றும் வனத்துறையின் சார்பில் அரசு ரப்பர் கழக கூட்டரங்கில் வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் இராஜ கண்ணப்பன் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு கூறியதாவது: கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மருதம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரப்பர் மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இங்கு வசிக்கும் மக்கள் ரப்பர் பால் வெட்டும் தொழிலினை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கென அரசு ரப்பர் கழகம் துவக்கப்பட்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது.
அரசு ரப்பர் கழகத்தில் நடந்து வரும் முக்கிய பணிகளாகிய முதிர்ந்த ரப்பர் மரங்களை அகற்றிவிட்டு புதிய ரப்பர் கன்றுகள் நடப்பட்டு வருகிறது. விரைவில் அரசு ரப்பர் கழகத்திலுள்ள மொத்த நிலப்பரப்பிலும் மரநடவு பணிகள் முடித்து, பால்வடிப்புக்கு கொண்டு வந்து உற்பத்தியை பெருக்கி, அரசு ரப்பர் கழகத்தை மேலும் அதிக முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தொழிலாளர் நலன் மற்றும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குரங்கு தொல்லை இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. இதைக் கட்டுப்படுத்த கூண்டுகள் வைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கவால் குரங்குகள் மலைப் பகுதிகளில் வசிப்பவை என்பதால், அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வராது. வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் காடுகள் சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ், தாரகை கத்பர்ட், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அரசு ரப்பர் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ், அரசு ரப்பர் கழகம் பொது மேலாளர் திலீப்குமார், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



