மதுரை, ஜனவரி 9 –
மதுரையில் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி மதுரை மாவட்டத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19/12/2025 அன்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98 இல் 844 பேர் வரைவு பட்டியலில் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ஆளுங்கட்சியின் தூண்டுதலால் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் திட்டமிட்டு மரணமடைந்த 29 பேர் பெயர்களும், நிரந்தரமாக இடம் பெயர்ந்த 12 பேர் பெயர்களும், ஒரு இரட்டை பதிவு என 42 பேர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பதிவுகளை நீக்கவும், தவறிழைத்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டும் உரிய ஆவணங்களுடன் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மதுரை மாநகராட்சி மண்டலம் 2 இன் உதவி ஆணையாளரிடம் புகார் மனுவினை வழங்கினார்.
மேலும் எஸ்ஐஆரை எதிர்ப்பது போல வெளியில் காட்டிக் கொண்டாலும் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு இது போன்ற மோசடிகளை செய்து தேர்தலில் வெற்றி பெற திமுக அரசு முயற்சித்து வருகிறது. திமுக அரசின் மோசமான இந்த நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகளிர் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த முறை திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.



