நாகர்கோவில், ஜன. 8 –
தமிழர் விழாவாம் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பட்ட மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டத்தினை சென்னையில் தமிழக முதல்வர் இன்று துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட முகிலன்விளை நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000யினை குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்: தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் சமத்துவ பொங்கல் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி, ஒரே பந்தியில் அனைத்து தரப்பட்ட மக்களும் அமர்ந்து சாப்பிட வைத்து, இத்திட்டத்தினை செயல்படுத்தினார்கள். நம்முடைய வளர்ச்சி என்பது ஒற்றுமையில் தான் இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



