மார்த்தாண்டம், ஜன. 6 –
குமரி மாவட்டம் கடையல் பேரூராட்சி உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தோட்டவாரம், செங்குழிக்கரை என்ற பகுதியில் கோதையாற்றில் குடிநீர் உறை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்வது வழக்கம்.
நேற்று மாலையில் அந்த பகுதியில் பொதுமக்கள், வாலிபர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது உறை கிணற்றின் மேல் ஏதோ ஒன்று கிடைப்பதை சிலர் பார்த்தனர். பின்னர் அது முதலை என்பது தெரிந்தது. இதை அந்த பகுதியில் நின்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்தில் பின் முதலை நகர்ந்து தண்ணீரில் விழுந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி பரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இதே கோதையாற்றில் திற்பரப்பு அருகே முதலை கிடப்பதை ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பார்த்தனர். அந்த வீடியோவும் வைரலாகி இருந்தது.
கோதை ஆற்றில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தான் தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதனால் காற்றாற்று வெள்ளத்தில் முதலைகள் இழுத்து வரப்பட்டு கோதையற்றில் தற்போது கிடக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர். ஆற்றில் தொடர்ந்து முதலில் நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் என்பவரிடம் கேட்டபோது: கோதையற்றில் நாங்கள் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளோம். ஆனால் முதலைக்கான தடயங்கள் இல்லை. ஏற்கனவே ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு முதலையை பார்த்ததாக சொல்லுகிறார்கள். அதன் பின்னர் எந்த தடயமும் கிடைக்கவில்லை. பேச்சிப்பாறை அணை தண்ணீரில் இருந்து முதலை வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் முதலை இருந்ததற்கான எந்தவித தடயமும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். வனத்துறை அதிகாரியிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். தடயங்கள் ஏதும் இல்லாமல் வனத்துறை எதுவும் செய்ய முடியாது. முதலை குறித்து இதற்கு முன் கிடைத்த வீடியோவில் முதலை குட்டியாக இருந்தது. தற்போதுள்ள வீடியோவில் சற்று பெரிதாக உள்ளது. எனவே இது குறித்தும் ஆராயப்படும் என கூறினார்.



