நாகர்கோவில், ஜன. 5 –
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசருக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எழுதியுள்ள கடிதங்களில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளை நேரடியாகவும், மின்னணு முறையிலும் தாக்கல் செய்யலாம் என்ற நிலையில் 1.12.2025 முதல் மாவட்ட நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இம்முறைக்கு வலுவான இணையதள வசதி இருக்க வேண்டும். குறிப்பாக, மலையடி வாரப் பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் போதுமான இணையதள வசதியில்லை. மேலும், குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்பவர்களே இணையதளத்தில் தனி முகவரியை உருவாக்கி, அதன் வழியாக மனுக்களை தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இதனால் வழக்கறிஞர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் வழக்கறிஞர்களுக்கு முறையான பயிற்சியினை அளித்து, பொதுமக்களுக்கும் முறையான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கட்டமைப்பு வசதிகளையும் முறையாக செய்து, இ-பைலிங் முறையில் உள்ள குழப்பங்களையும், குறைபாடுகளையும் சரிசெய்து, இணையதள வசதிகளை முறைபடுத்தாத இடங்களில் முறைபடுத்தியும், மலையடி வாரப் பகுதிகளில் இணையதள வசதிகளை தங்கு தடையில்லாமல் முறையாக உரிய கட்டமைப்பு ஏற்படுத்தி கொடுத்த பின்பு நடைமுறைபடுத்த வேண்டும்.
இந்தியாவில் கேரள மாநில நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை உரிய கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், இங்கு உரியகட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இக்கட்டமைப்பு வசதிகளை முறையாக செய்யாமல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கும் போது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு, இ-பைலிங் முறையை தமிழக நீதிமன்றங்களில் அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை பலப்படுத்தவும், மேலும் மாவட்ட நீதிமன்றங்கள், கூடுதல் நீதிமன்றங்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இ-பைலிங் முறையை செயல்படுத்துவதற்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கவும், நீதித்துறைக்கு உரிய நிதி ஒதுக்கீட்டீனை வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கடிதங்களில் கூறியுள்ளார்.



