குளச்சல், டிச. 26 –
தக்கலை அடுத்த மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் (37). இவர் மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழியில் உள்ள பைக் ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை ஒட்டி நேற்று மாலை தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் காரில் முட்டம் கடற்கரையில் சென்று விட்டு மாலையில் மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தார். காரை அகஸ்டின் மனைவி ஓட்டியுள்ளார்.
மணவாளக்குறிச்சியை கடந்து மண்டைக்காடு நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதை கவனித்த அகஸ்டின் மனைவி காரை நிறுத்திவிட்டு இரண்டு குழந்தைகளுடன் அவசர அவசரமாக வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து அறிந்ததும் குளச்சல் தீயணைப்பு நிலைய வீர்கள் சென்று தீயை அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. சரியான நேரத்தில் கவனித்ததால் நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.



