நாகர்கோவில், டிசம்பர் 20 –
குமரி மாவட்ட பஸ்களில் தொடர்ச்சியாக நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதை தொடர்ந்து, சிறையில் இருந்து ஜாமினில் வந்த பெண்கள் திருட்டு கும்பல்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் பஸ்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. நாகர்கோவிலில் வயதான பெண்கள், குழந்தைகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. பெண் திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் தான் கைவரிசை காட்டி வருகின்றனர். ஏற்கனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த பெண்களை போலீசார் கைது செய்திருந்தனர். இவர்கள் விருதுநகர், மதுரை, சேலம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
கையில் குழந்தைகளுடன் ஏரி கூட்ட நெரிசலில் இடிப்பது போல் நடித்து அருகில் நிற்கும் பெண்களிடம் குறிப்பாக வயதான பெண்களிடம் கைவரிசை காட்டி விடுவார்கள் என்பது தெரியவந்தது. இடையில் குறைந்திருந்த சம்பவம் தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகை காலங்கள் தொடர்ச்சியாக வருவதால், பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்தி தற்போது மீண்டும் கைவரிசை காட்டி வருகின்றனர். சமீபத்தில் இரணியல் அருகே பஸ்ஸில் பெண் ஒருவரிடம் பர்ஸை திருடிவிட்டு தப்ப முயன்ற 3 பெண்களை போலீசார் பிடித்தனர். இவர்களில் ஒருவர் கர்ப்பிணி ஆவார். இவர்கள் மீது புகார் எதுவும் இல்லாததால் இவர்களை போலீசார் எச்சரித்து விடுவித்துள்ளனர்.
இதற்கிடையே தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக நாகர்கோவிலில் செட்டிகுளம், பார்வதிபுரம், கோட்டார், வேப்ப மூடு, மணிமேடை பகுதிகளில் போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான பெண்களின் புகைப்படங்களை தனியாக பிரித்து எடுத்து அதன் மூலம் விசாரணை நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களில் கைதான பெண்கள் ஜாமினில் வெளியே வந்த நிலையில் அந்த கும்பலை சேர்ந்த சிலர்தான் மீண்டும் கைவரிசை காட்டி வருவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே பஸ்களில் திருட்டு சம்பவங்களில் கைதாகி ஜாமீனில் வந்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.


