நாகர்கோவில், டிசம்பர் 2 –
கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் திருப்பலி மற்றும் மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடைபெற்று வருகின்றன. கடந்த ஒன்றாம் தேதி (நேற்று) எட்டாம் திருவிழா நடந்தது. இதையொட்டி மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் இரவில் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பேராலய வளாகத்தில் இருந்து காவல் தூதர், புனித செபஸ்தியார் மற்றும் புனித சவேரியார் ஆகிய 3 தேர்கள் மேள தாளங்கள் முழங்க வலம் வந்தன. தேருக்கு பின்னால் கும்பிடு நமஸ்காரம் செய்து பக்தர்கள் நேர்ச்சை நிறைவேற்றினர். உப்பு, மெழுகுவர்த்தியும் காணிக்கையாக வழங்கினர்.
இன்று (2ம் தேதி) ஒன்பதாம் திருவிழா நடந்தது. இதையொட்டி மாலையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடந்தது. இரவு தேர் பவனி நடைபெற்றது. இன்று மாலையிலிருந்து அதிகளவில் ஆலயத்துக்கு பக்தர்கள் வந்தனர். குமரி மாவட்டம், மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், திருவனந்தபுரத்தில் இருந்தும் அதிகம் பேர் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
நாளை (3ம் தேதி) பத்தாம் திருவிழாவாகும். காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடக்கிறது. காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி, பின்னர் காலை 11 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.
இன்றும், நாளையும் அதிகளவில் மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று (2ம் தேதி) மதியம் ஒரு மணி முதல் நாளை (3ம் தேதி) இரவு திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும். 10ம் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ஆகும்.



