நாகர்கோவில், நவம்பர் 10 –
நாகர்கோவிலில் மாணவிகள், இளம்பெண்களை ரகசியமாக செல்போனில் படம் பிடித்த நபரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் மேலராமன் புதூர் சந்திப்பு பகுதியில் நின்ற நபர் ஒருவர் செல்போனில் அந்த பகுதியில் நின்ற இளம் பெண்கள், மாணவிகளை ரகசியமாக வீடியோ, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரத்திற்கு பின் சிறுமி ஒருவரை செல்போனில் படம் பிடித்ததை அந்த பகுதியில் நின்ற சிலர் கவனித்தனர். அவரிடம் இது குறித்து விசாரித்த போது செல்போனை ஆப் செய்துவிட்டு அங்கிருந்து நகர முயன்றார்.
ஆனால் அதற்குள் பொதுமக்கள் அவரை பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர். அதில் சிறுமியை ஆபாசமான முறையில் போட்டோ எடுத்து இருந்தது தெரிய வந்தது. அது மட்டுமின்றி, அந்த பகுதியில் நின்ற வேறு சில இளம் பெண்கள் மாணவிகளையும் ஆபாசமான முறையில் போட்டோ எடுத்ததும் தெரியவந்தது. எனவே அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கினார்.
பின்னர் நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த பாபு என்பதும், கொத்தனார் என்பதும் தெரியவந்தது. அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது இளம் பெண்கள், சிறுமிகளை விதவிதமாக எடுத்து இருந்த 300 போட்டோக்கள் இருந்தது தெரிய வந்தது. இவர் பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள், பள்ளி, கல்லூரிகள் அருகில் என்று சிறுமிகள், இளம்பெண்களை தனக்கு விருப்பமான முறையில் ஆபாசமாக படம் பிடித்து அதனை ரசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் செல்போனில் படங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததுடன் ஏன்? இவற்றை படம் பிடித்தார், இதை யார் யாருக்கு சேரிங் செய்தார், இவரது கூட்டாளிகள் யாராவது உள்ளார்களா என்பது பற்றி விசாரிக்க வேண்டி உள்ளதால் பாபுவை நேற்று இரவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


