ஈரோடு, நவ. 10 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த வர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடத்தி ஆலோசனைகளை பகிர்ந்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் ஈரோடு பத்திரிகையாளர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியை நடத்தி ஆலோசனைகளை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. தகுதியான எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற நோக்கில் தீவிர வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடைபெற அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடும் வகையில் அனைவருக்கும் பத்திரிகையாளர்கள் செய்திகள் வாயிலாக கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் குறித்த சிறப்புகள் குறித்து புத்தகமாக எழுதிட முன்வர வேண்டும். மேலும் சுற்றுத்தலங்கள் அங்கு தேவையான வளர்ச்சித்திட்டப்பணிகள் இது போன்ற நிகழ்வுகளை வெளிகொண்டு வர வேண்டும். சுற்றுத்தலங்களை மேம்படுத்த சுற்றுலாத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பத்திரிக்கையில் சுட்டிக்காட்டப்படும் செய்திகளை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தீர்வு காணப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தும் துறைகள் மூலம் தேவையான விவரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க பட்டுவருகிறது.
பத்திரிக்கையாளர்கள் அல்லாமல் மற்றவர்கள் ஊடக ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டது கண்டறிய பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பத்திரிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பத்திரிக்கையாளர்கள் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதில் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சிதலைவர் தாம் பணியாற்றிய அரசு பணிகள் தொடர்பாக அனுபவங்களை பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் ஆட்சியரிடம் பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்த காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிக்கு கூட அழைப்பு இல்லை . இருப்பினும் அழைப்பு இல்லாமலேயே நாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் என்று புகார் கூறினர்.
இதற்கு ஆட்சியர் இது பற்றி விசாரித்து இனி இந்த புகார் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.



