நாகர்கோவில், நவ. 6 –
குமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் மையப் பகுதியில் நாகர்கோவில் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு கிராம நிர்வாக அலுவலகம், இ சேவை மையம், தமிழ்நாடு அரசின் காப்பீடு சேவை மையம் போன்றவைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் நிலவரி மற்றும் சொத்து சம்பந்தமான பட்டா, சிட்டா போன்ற பல்வேறு ஆவணங்களை பெறுவதற்காகவும், அரசின் திட்டங்களான பென்ஷன், உதவித்தொகை போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கவும் வருவது வழக்கம். அதேபோல் இப்பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீட்டு உதவி மையத்திலும் மருத்துவ தேவைகளுக்காக விண்ணப்பிப்பதற்காக ஏராளமானோர் வந்து நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் காத்திருக்கும் போது இந்த அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள செடி கொடிகளில் இருந்தும் குப்பைகளிலிருந்தும் ஏராளமான கொசுக்கள் வந்து கடித்து நோய் தொற்று ஏற்படுவதாகவும் அதேபோல் புதர் மண்டி கிடந்த இடங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அலுவலகத்திற்கு உள் பணி செய்யும் அரசு அலுவலர்களும் தினந்தோறும் இந்த கொசு கடிக்கு ஆளாகி வருவது மட்டுமல்லாமல் மாலை நேரங்களில் விஷ பூச்சிகளில் நடமாட்டம் இருப்பதால் வெளியில் இறங்கி நடக்கவும் பயந்தபடி இருந்தனர்.
எனவே நாகர்கோவில் கிராம நிர்வாக அலுவலர் பிரதீப், அவரின் உதவியாளர் பாலாஜி ஆகியோரின் முயற்சியில் நாகர்கோவில் மாநகராட்சி 23 வது வார்டு சுகாதார அதிகாரி ஜானை தொடர்பு கொண்டு இப்பகுதியில் உள்ள கொசுக்களின் தொல்லை, விஷ ஜந்துக்களின் தொல்லை மற்றும் இப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் காடுகளை அகற்றி தரும்படி கேட்டுக்கொண்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் கேட்டுக்கொண்டதன் பேரில் சுகாதார அதிகாரி ஜாண் உடனடியாக சுகாதார மேற்பார்வையாளர் தங்கவேலை சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகள் காடுகள் போன்றவற்றை அகற்றி மண்மேடுகளை நிரப்பி அப்பகுதி முழுவதும் கொசு மருந்து அடித்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவைத் தொடர்ந்து சுகாதார மேற்பார்வையாளர்கள் தங்கவேல் மற்றும் தவசி ஆகியோர் உடனடியாக கிராம நிர்வாக அலுவலக பகுதிக்கு வந்து துப்புரவு பணிகளை மேற்கொண்டு ஹிட்டாச்சி உதவியுடன் அப்பகுதி முழுவதும் சுத்தம் செய்து விஷப் பூச்சிகளை அழிப்பதற்கான மருந்து தெளித்தும், புகை அடித்தும் பணிகளை மேற்கொண்டனர்.


