இரணியல், நவ. 5 –
தக்கலை அருகே பிரம்மபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ் (36). லாரி டிரைவர். இவர் கடந்த 31 ஆம் தேதி காலை தோட்டியோடு மலையடிவார பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் அருகில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து நடந்த விசாரணையில் கிருஷ்ணதாஸை திருவிடைகோட்டை சேர்ந்த ரமேஷ் மற்றும் விமல் ஆகியோர் மது வாங்கி கொடுத்து, அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் விசாரித்ததில் கிருஷ்ணதாஸ் மனைவி பவித்ராவுக்கும் முதல் குற்றவாளியான ரமேஷ் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்ததாகவும் இதை கிருஷ்ணதாஸ் தட்டி கேட்டதால் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து கிருஷ்ணதாஸ் மனைவி பவித்ரா (33), அவரது தாயார் முத்துலெட்சுமி (57) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து தக்கலை சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரமேஷ், விமல் இருவரும் தென்காசி மாவட்டம் புளியறை பகுதியில் உள்ள ரமேஷின் உறவினரான ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதை அடுத்து தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு ரமேஷ் உறவினர்கள் இருவர் மட்டும் இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரித்த போது ரமேஷ் பம்பை சென்றிருப்பதாக கூறினர்.
இருவரையும் அழைத்துக் கொண்டு போலீசார் கேரள மாநிலம் பம்பைக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த ரமேஷ், விமல் இருவரையும் உறவினர்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். இருவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.


