சென்னை, நவ. 04 –
பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோயை அதன் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதையும் மற்றும் அப்பாதிப்பு வராமல் முன்தடுப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக ” இந்தியா டர்ன்ஸ் பிங்க் ” என்ற அமைப்பின் ஆதரவோடு, படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு திட்டத்தை குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் சிறப்பாக நடத்தியது.
நடை பயண பேரணி மற்றும் கையெழுத்து சேகரிப்பு பரப்புரையும் இதன் ஒரு அங்கமாக இடம்பெற்றன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஐஏஎஸ், இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். “இந்தியா டர்ன்ஸ் பிங்க் ” அமைப்பின் நிறுவனரும், தலைவருமான பி.ஏ.ஆனந்த குமார் மற்றும் நவீன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்ஷீர் வசுதா குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக இதில் கலந்து கொண்டனர்.
தலைமை விருந்தினரான காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஐஏஎஸ், இந்நிகழ்ச்சியில் பேசுகையில்: “தொழில்நுட்பமானது சமீப காலத்தில் பல துறைகளிலும் பல்வேறு விதங்களில் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. முன்பெல்லாம் புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள் அதிக கடினமானதாக மற்றும் அதிக நேரம் எடுப்பதாக இருந்தன. இன்றைய காலகட்டத்தில் நவீன நோயறிதல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால், முன்னதாகவே அவற்றை அடையாளம் காண்பது மிக எளிதானதாக மாறியிருக்கிறது. புற்றுநோயின் நிலை 1 அல்லது நிலை 2 என்ற நிலையிலேயே கண்டறியப்படுமானால், அதை சிகிச்சையின் மூலம் அதை முற்றிலும் குணப்படுத்த முடியும். எனவே, இது குறித்த விழிப்புணர்வைப் பெற்று ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பெறும் நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டுமென்று ஒவ்வொருவரையும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
நவீன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஷீர் வசுதா குமார் இந்நிகழ்வில் கூறியது: இன்றைய நவீன யுகத்தில் மற்றும் தற்போதைய தலைமுறையினர் மத்தியில் மார்பக புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே ஸ்க்ரீனிங் சோதனைகளை செய்து கொள்வது ஒரு இயல்பான மற்றும் அத்தியாவசியமான சுகாதார நடைமுறையாக கருதப்பட வேண்டும். இது பற்றி நாம் அனைத்து நிலைகளிலும் பரவலாகப் பேசும்போது, பொதுமக்கள் மத்தியில் அது குறித்த விழிப்புணர்வை நாம் அதிக அளவில் உருவாக்க முடியும்.
இந்தியா டர்ன்ஸ் பிங்க், இத்தகைய சிறப்பான முன்னெடுப்புகள் சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்குகின்றன. ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியம் மீது அக்கறை காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தை இந்நிகழ்ச்சி ஏற்படுத்துகின்றன.” என்றார் மேலும் இந்நிகழ்ச்சியில் பொது மக்களும், அதிகாரிகளும், தன்னார்வலர்களும் இணைந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



