மார்த்தாண்டம், அக். 28 –
குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். தொழிலாளி. இவர் நாகர்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தனியார் வங்கியில் வீட்டை அடமானம் வைத்து ரூ. 10 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக மாதம் தோறும் வட்டியுடன் தவணை செலுத்தி வந்த நடராஜன், சில தவணைகளை சரியான தேதியில் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனியார் வங்கி ஊழியர்கள் வீட்டில் வந்து கேட்டதுடன், அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அந்த வங்கி ஊழியர்கள் நடராஜன் வீட்டு சுவரில் கடன் குறித்த நோட்டீசை ஒட்டியுள்ளனர். இதனால் நடராஜன் மன வேதனை அடைந்தார். இதையடுத்து அவரது மனைவி மற்றும் மகன் ஜெரின் ஆகியோர் பணம் ஏற்பாடு செய்வதற்காக சென்று உள்ளனர். அவர்கள் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டிய நிலையில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது நடராஜன் மின்விசிறியில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவு உடைத்து உள்ளே சென்றபோது நடராஜன் தூக்கில் பிணமாக காணப்பட்டார். இது குறித்து அவரது மகன் குலசேகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி நடத்தினர். இதனை தொடர்ந்து போலீசார் நடராஜன் உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் தனியார் வங்கி ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஊழியர்கள் தலைமறைவானதாக கூறப்படுகிறது.



