சென்னை, அக்டோபர் 27 –
நீரிழிவு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு இடையிலான நுட்பமான தொடர்புகளை ஆராயும் நவீன ஆராய்ச்சிக்காக நீரிழிவு ஆராய்ச்சியில் புகழ்பெற்ற மெட்ராஸ் டயாபட்டீஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் உலகளவில் புகழ்பெற்ற பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் அமைந்துள்ள சென்டர் ஃபார் பிரெய்ன் ரீசர்ச் மற்றும் யுகே டிமென்ஷியா ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் சென்னையை சேர்ந்த மெட்ராஸ் டயாபட்டீஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் இணைந்து செயல்பட சென்னை கோபாலபுரம் மோகன் டயாபட்டீஸ் மருத்துவமனை வளாகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மெட்ராஸ் டயாபட்டீஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷனின் தலைவர் டாக்டர். வி. மோகன் கூறியதாவது: “நீரிழிவு எப்படி உடலை மட்டுமின்றி, மூளையையும் பாதிக்கிறது என்று புரிந்து கொள்வதற்கான எமது பயணத்தில் இந்த ஒத்துழைப்பு ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாகும். நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தில் பல தசாப்தங்களாக நாங்கள் ஆற்றி வரும் ஆராய்ச்சிப் பணியின் வழியாகவும் மற்றும் புகழ்பெற்ற மூளை நரம்பியல் அறிவியலாளர்கள் மற்றும் டிமென்ஷியா மீதான ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்படுவதன் வழியாகவும் உலகெங்கிலும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்
மேலும் டாக்டர். ஆர்.எம்.அஞ்சனா பேசுகையில், “அறிவுத்திறன் குறைவதற்கும் மற்றும் மறதி நோய் எனப்படுகின்ற டிமென்ஷியா பாதிப்பிற்கும் ஒரு அபாயக் காரணியாக நீரிழிவு இருப்பது அதிகரித்த அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சியில் புகழ்பெற்ற இந்த அமைப்புகளுடனான இக்கூட்டாண்மையின் வழியாக, நீரிழிவு பாதிப்புள்ள நபர்களில் மூளையின் முதுமையை ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டும் அம்சங்களை அடையாளம் காண்பதற்கு பல்துறை நிபுணத்துவம் மற்றும் மாறுபட்ட தரவு தொகுப்புகளை நாங்கள் திறம்பட பயன்படுத்த இருக்கிறோம். இந்த ஒத்துழைப்பு, நோய் தடுப்பு மற்றும் சிறந்த சிகிச்சைக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.” என்று கூறினார்.



