மதுரை, அக்டோபர் 16 –
மதுரை கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் கூறியதாவது:
திமுக என்றாலே கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்று தான் உள்ளது கோட்டை முதல் பஞ்சாயத்து வரை அனைத்து நிலையிலும் ஊழல்தான் வேரூன்றி உள்ளது. இதனைத் தொடர்ந்து எடப்பாடியார் சட்டமன்றத்திலும்,மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார்.
மதுரை மாநகராட்சியில் வரலாறு காணாத வகையில் 200 கோடிக்கு மேல் வரி முறைகேடு நடைபெற்றுள்ளது, இதுகுறித்து எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தார்.
மேலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பதை போல இன்றைக்கு ஊழல் வெளிச்சத்துக்கு வந்த பின்பு அரசின் மீது உள்ள கரையை போக்க முதலில் 5 மண்டல தலைவர்கள்,2 நிலைக்குழு தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார்கள்.அதனை தொடர்ந்து ஊடங்களில் பூதகாரமாக வெடித்த பின்பு மேயர் கணவரை கைது செய்தார்கள். பொதுவாக இந்திய அரசியல் சட்ட அமைப்பின்படி
மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்களின் குடும்பத்தினர், ரத்த உறவுகள் தவறு செய்தால் அந்த பதவியில் அவர் நீடிக்க கூடாது என்று உள்ளது. தற்பொழுது இந்தப் பிரச்சனை மேலும் வலுவாக இருந்த நிலையில் தற்போது மேயர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
குறிப்பாக இந்த நான்கரை ஆண்டுகளில் மதுரை மாநகராட்சி என்பது ஊழல் மாநகராட்சியாக மாறிவிட்டது கடந்த 2021 – 2022 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 430 கோடியும், 2022 – 2023 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1,257 கோடி ரூபாயும், 2023 – 2024 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1,751 ரூபாயும், 2024 – 2025ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1296 கோடி ரூபாயும், 2025 – 2026 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1,480 கோடி ரூபாய் என இந்த 5 நிதிநிலை அறிக்கையில் சுமார் 6,208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரையில் 100 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் நிதிகளை முறைப்படி செய்யப்பட்டுள்ளதா? ஏனென்றால் மதுரையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படவில்லை. சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. சாலைகளில் தெருவிளக்கு இல்லை இது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளால் மக்கள் தவித்து வருகிறார்கள்.
அதேபோல கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் நேரு மதுரை மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்று கூறினார்.
அந்த பணம் முழுமையாக ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்து உள்ளது. ஏற்கனவே நிதி அறிக்கையில் 6,208 கோடி, அதே
போல மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், நிதிகள் எல்லாம் மதுரை மாநகராட்சியில் முறையாக செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆகவே இதுகுறித்து ஒரு முழுமையான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
குறிப்பாக அரசு என்றால் மக்களுக்காக சேவையை செய்யும் சேவகனாக இருக்க வேண்டும் ஆனால் இன்றைக்கு திமுக அரசு மக்களிடத்தில் வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு என மக்களிடம் பணத்தை சுரண்டும் அரசாக இருக்கக் கூடாது. திமுக ஆட்சியில் உள்ளாட்சியில் நல்லாட்சி இல்லை உள்ளாட்சியில் ஊழல் ஆட்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


