நாகர்கோவில், அக். 16 –
அரசு நடத்திய தேர்தல் மூலம், நீர்வளத்துறை கோதையாறு பாசன அமைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ள 46 நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று பாசனத் துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அடையாள அட்டை தயாரித்து நாகர்கோவில் ஆர்டிஓ மற்றும் பத்மநாபபுரம் சப் கலெக்டர் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெங்கின் பிரபாகர் செயல்படுத்தி வந்தார்.
பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்களும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களும் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆட்சியரின் உதவியாளரிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தார்கள்.
இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டாட்சியர் தயார் செய்த 30 அடையாள அட்டைகளையும், தக்கலை சார் ஆட்சியர் தயார் செய்திருந்த 10 அடையாள அட்டைகளையும் உடனே பாசனத்துறை நிர்வாகிகளுக்கு விநியோகிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் நிர்வாகிகளான தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, அருள், செண்பகர பிள்ளை, தங்கபெருமாள், விஜயேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து அலுவலக நேரத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்களை சந்தித்து அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்காத தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விரைவில் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். மேலும், அடையாள அட்டை வழங்க உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் நடவடிக்கை எடுத்து அடையாள அட்டை வழங்கிய அதிகாரிகளுக்கும் பாசனத்துறை நிர்வாகிகளும் விவசாயிகளும் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்



