சிவகங்கை, அக். 04 –
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மற்றும் ஆய்வுகளை முடித்துவிட்டு சாலை மார்க்கமாக மதுரை நோக்கி வந்த வழியில் சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டார்.
அங்கு காட்சிப்படுத்தப்பட்ட தொல்பொருட்களை ஆர்வமுடன் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் மொத்தம் ஆறு கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள காட்சியகங்களில் உள்ள ஒவ்வொரு பொருளையும் விரிவாக ஆய்வு செய்தார். அத்துடன் அருங்காட்சியகத்தில் இருந்த பார்வையாளர்கள், மாணவர்கள், மாணவிகளுடன் நேரடியாக உரையாடி அவர்களுடன் செல்ஃபி எடுத்தார்.
மேலும், இதனைத் தொடர்ந்து கீழடியில் ஒன்று முதல் பத்து வரை நடைபெற்ற அகழாய்வு பகுதிகளில் 916 சதுர மீட்டர் பரப்பளவில் திறந்த வெளி அருங்காட்சியகத்தை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இதற்காக 17 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வை முடித்துவிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மதுரை விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.



