கன்னியாகுமரி, செப். 22 –
இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத மகாளய அமாவாசை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தார்கள்.கடலில் நீராடிவிட்டு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். பின்னர் பூஜை செய்த பொருட்களை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.
மகாளய அமாவாசையை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், உஷ பூஜை, உஷதீபாராதனை, உச்சி கால பூஜை, உச்சிகால தீபாராதனை, பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு. சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலையில் சாயராட்சை தீபாராதனையும் இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும்,அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாரதனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.



