விழுப்புரம், செப். 11 –
கடந்த ஏப்ரல் 2010-ம் ஆண்டு அப்பொழுது முதல்வராக இருந்த மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் சிறப்பு மருத்துவர்கள் இருந்தாலும் குறிப்பாக நரம்பியல் துறையில் கடந்த சில மாதங்களாக சிறப்பு மருத்துவர்கள் இல்லாததை அறிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் பொது சொத்து நல வாரிய உறுப்பினரும், திமுக தொழிலாளர் விவசாய அணி செயலாளருமான அன்னியூர் சிவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு கடந்த 8ந் தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பினார்.
அதில் அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த இணை பேராசிரியர் வேறொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். மேலும் முதுநிலை நரம்பியல் அறுவை சிகிச்சை பட்டப்படிப்பை முடித்து இரண்டு வருட ஒப்பந்த காலத்தில் (Bonded Period) இம்மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த Non-Service மருத்துவ மாணவர்களும் ஒப்பந்தகாலம் முடிந்துவிட்டதால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையானது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதாலும், உளுந்தூர்பேட்டை முதல் விக்கிரவாண்டி வரையுள்ள பகுதியில் அதிக சாலை விபத்து நடப்பதால் நரம்பியல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தால் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு மிகுந்த சிரமமும், உயிரிழப்பும் ஏற்படுகிறது.
எனவே, நரம்பியல் அறுவை சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நலன் கருதி குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். மேலும் தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். இந்நிலையில்
இன்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நரம்பியல் நிபுணரை
மக்கள் நல்வாழ்வுத்துறை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனை அறிந்த பொதுமக்கள், தொகுதி மக்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் நரம்பு சம்மந்தமான நோயாளிகள் தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தங்கள் பாராட்டுகளையும் நன்றியையும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.



