போகலூர், ஆக. 16 –
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் அ.புத்தூர் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் பங்கேற்று ஊராட்சி மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து பேசுகையில்: கிராம சபை கூட்டத்தின் நோக்கம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பொதுமக்கள் ஒன்று கூடி கலந்து ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றுவதாகும்.
அந்த வகையில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் போல் ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் ஊர் பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் தேவையான பணியை தேர்வு செய்து தீர்மானத்தின் மூலம் நிறைவேற்றி திட்டங்களை செயல்படுத்திட வேண்டும். கிராம சபையில் முன்மொழியும் ஒவ்வொரு திட்டங்களும் வலு சேர்க்க கூடிய ஒன்றாகும். அதுமட்டுமின்றி தனியார் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கும் கிராம சபை கூட்டம் பயனுள்ளதாக அமையும். எனவே அனைவரும் இது போன்ற கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
இன்று பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக தெரிவித்த கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பேவர் சாலை அமைக்க கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் மின்சாரம் தடையின்றி கிடைத்திட கூடுதல் மின்மாற்றி அமைக்கப்படும். மேலும் கண்மாய் பகுதியில் உயர் மின்னழுத்த பெயர்கள் தாழ்பாக போவதாக கூறப்பட்டதை கவனத்தில் கொண்டு ஒரு வார காலத்திற்குள் சரி செய்யப்படும். பகுதியில் குடிநீர் சீராக வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து பயன்பெற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின் விரிவான சாலை திட்டம், போன்ற திட்டங்கள் செயல்படுவதுடன் அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அது மட்டும் இன்றி மாணவர்கள் உயர்கல்வி பெறவும் வேலைவாய்ப்பு பெறவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார். தொடர்ந்து வேளாண்மை துறை தோட்டக்கலைத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் தட்ட இயக்குனர் பாபு, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பத்மநாபன், பரமக்குடி தாசில்தார் வரதன், போகலூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, போகலூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், அ.புத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன், திமுக மாவட்ட பிரதிநிதி மற்றும் அ.புத்தூர் கிளை செயலாளர் கார்த்திக் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



