கோவை மாவட்டம் காரமடை, டாக்டர். ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் நம் நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர்.சி.என்.ரூபா அவர்கள் தலைமையேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தினவிழா உரையாற்றினார். அவர் பேசிய உரையில்,
நம் இந்திய தேசத்தின் விடுதலைக்காக இரத்தம் சிந்தி தம் இன்னுயிர் நீத்தவர்கள் பலர். இப்படி பல பேர் உயிர் நீத்து போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரது கடமையாகும். நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் இருந்தாலும் சாதி,மத, இனப் பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்பவர்கள் ஆவோம். இந்த ஒற்றுமை உணர்வால் தான் வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரர்களின் தியாகத்தையும், கருணையையும், அன்பையும் உணர்த்துவது இந்த மூவர்ணக்கொடி. இந்நேரத்தில் கொடிகாத்த வீரராகிய திருப்பூர் குமரனை நினைவு கூர்வது அவசியம். தன் இளம் வயதிலேயே நம் இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடி உயிர்பிரியும் நேரத்திலும் நம் தேசியக்கொடியை கையை விட்டு அகலமாமல் பிடித்திருந்த நாட்டுப் பற்றை நினைத்து நாம் பெருமை கொள்வோம். அத்தகைய நாட்டுப்பற்றை நாமும் வளர்த்து நம் தேசத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வோம் என்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் கல்லூரியின் அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.