மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த அறுபத்துமூவர்பேட்டை கிராமத்தில் உள்ள சப்தகன்னி கோயிலில் அமர்நாத் பனி லிங்கம் போன்று 6 அடி உயரத்தில் பனிக்கட்டியால் சிவலிங்கம் செய்து சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அறுபத்துமூவர் பேட்டையில் அமைந்துள்ள வராகி அம்மன் சப்த மாதா ஆலய வளாகத்தில் இந்த ஆண்டு பனிலிங்கம் அமைக்கப்பட்டது. பனிலிங்கத்துக்கு மலர்மாலைகள் மற்றும் தாமரை மணி மாலை ஆகியவை லிங்கத்துக்கு சாற்றப்பட்டு கோ பூஜை நடைபெற்றது. பின்னர் பனி லிங்கத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. 12 ஆண்டுகளாக மயிலாடுதுறையில் சிவராத்திரியன்று பாஜக சார்பில் பனிலிங்கம் வைக்கப்பட்டு பூஜை செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். பாஜக மாவட்ட துணை தலைவர் மோடி.கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நாஞ்சில்பாலு, மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன், நகர பொதுச்செயலாளர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வினோத், சேந்தங்குடி முத்து, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



