கருங்கல் ஜன 28
கருங்கல் அருகே நடுத்தேரி பகுதியில் பெத்லகேம் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது.இங்கு 120 மாணவிகள் நர்சிங் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த மாணவிகள் வார்டன்களால் டார்ச்சர், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமை, அதிகப்படியான அபராதம், தரமில்லாத உணவுகள் போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஏற்கனவே அங்கு வேலை பார்த்து வந்த ஹாஸ்டல் வார்டனை மாற்றி புதிய வார்டனை நியமித்துள்ளனர்.
இது சம்மந்தமாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் மயங்கி விழுந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து நர்சிங் கல்லூரி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெரும்பாலான மாணவிகள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு போராட்டம் நடப்பதை அறிந்து கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் கல்லூரியில் எந்த சம்பவமும் இல்லை எனக் கூறி போலீசாரை உள்ளே விடவில்லை என கூறப்படுகிறது. கடும் பிரச்சினைக்குப் பிறகே போலீசாரை உள்ளே அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து குளச்சல் ஏஎஸ்பி பிரவீன்கெளதம், கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவிகளின் குறைகளை கேட்ட தாசில்தார் மற்றும் ஏஎஸ்பி மாணவிகளிடம் உங்களின் குறைகள் அனைத்தும் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், புதிய வார்டனை உடனடியாக மாற்றி பழைய வார்டன் நியமிக்கப்படுவார் எனவும், மற்ற குறைகளை வரும் வெள்ளிக்கிழமை தாசில்தார் மற்றும் ஏஎஸ்பி தலைமையில் கல்லூரி நிர்வாகம், மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் அனைவரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.