மதுரை மார்ச் 4,
மதுரையில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 37, 457 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை (சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து மதுரை வருவாய் மாவட்டத்தைப் பொருத்தவரை மதுரை, மேலூர் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 323 பள்ளிகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர், மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு 109 மையங்கள் அமைக்கப்பட்டன. இது தவிர, தனித் தேர்வர்கள், சிறை வாசிகளுக்கும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத் தேர்வை, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 37,457 மாணவர், மாணவிகள் எழுதினர். இதையொட்டி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா தலைமையில், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 130 பறக்கும் படைகளாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதுதவிர, மாற்றுத் திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ள மாணவர், மாணவிகள், மனவளர்ச்சி குன்றிய மாணவர், மாணவிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டனர்.