நாகர்கோவில் டிச 31
கச்சேகுடா- மதுரை, நாகா்கோவில், செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கச்சேகுடா-மதுரை-கச்சேகுடா (07191 / 07192), கச்சேகுடா-நாகா்கோவில்-கச்சேகுடா (07435/ 07436), செகந்திராபாத்- ராமநாதபுரம்-செகந்திராபாத் (07695/ 07696) வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கச்சேகுடா-மதுரை வரும் ஜன. 6-ஆம் தேதி முதல் மாா்ச் 31 -ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் இரவு 8.50 மணிக்கு கச்சேகுடாவிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07191) , மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரையை வந்து சேரும். மறு மாா்க்கத்தில், ஜன. 8 முதல் பிப். 2-ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07192) மறுநாள் காலை 7.05 மணிக்கு கச்சேகுடாவை சென்றடையும்.
ஒரு குளிா்சாதன முதல் வகுப்புப் பெட்டி, 2 குளிா்சாதன இரண்டடுக்குப் படுக்கை பெட்டிகள், 6 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கைப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், தலா ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, சரக்கு பெட்டி ஆகியன இந்த ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும்
ஜன. 5-ஆம் தேதி முதல் மாா்ச் 30 வரை வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7.45 மணிக்கு கச்சேகுடாவிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07435), மறுநாள் இரவு 10.30 மணிக்கு நாகா்கோவிலை வந்து சேரும். மறு மாா்க்கத்தில், ஜன. 5 முதல் மாா்ச் 30-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகா்கோவிலிலிருந்து அதிகாலை 12.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (07436) மறு நாள் காலை 6.30 மணிக்கு கச்சேகுடாவை சென்றடையும். இந்த ரயில்களில், ஒரு குளிா்சாதன முதல் வகுப்புப் பெட்டி, 2 குளிா்சாதன இரண்டடுக்குப் படுக்கைப் பெட்டிகள், 4 குளிா்சாதன மூன்றடுக்குப் படுக்கை பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஜன. 1-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் செகந்திராபாத்திலிருந்து இரவு 9.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (07695), மறு நாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரத்தை வந்து சேரும். மறு மாா்க்கத்தில் ஜன. 3-ஆம் தேதி முதல் மாா்ச் 28-ஆம் தேதி வரை ராமநாதபுரத்திலிருந்து வெள்ளிக்கிழமைகளில் காலை 9.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (07696) மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு சௌகந்திராபாத்தைச் சென்றடையும். இந்த ரயில் இரு மாா்க்கத்திலும் நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூா், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூா், கூடூா், சென்னை எழும்பூா், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த 3 வாராந்திர சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.