சென்னை, ஏப்ரல் 23
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி, விளையாட்டு மற்றும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
சென்றாண்டு, 104 விளையாட்டு வீரர்கள் அரசுத்துறைகளிலும், அரசுப் பொதுத்துறைகளிலும் பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், இந்த ஆண்டும் குறைந்தபட்சம் 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
காவல்துறையிலும் இந்த ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். Sportsmen Reservation மூலம் கடந்த ஆண்டு 11 விளையாட்டு வீரர்கள் காவல்துறையில் பணி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் அதேபோல் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன மேலும், மாற்றுத்திறனாளி வீரர்களின் நலனையும் அரசு கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், 2024 ஆம் ஆண்டில் 5 மாற்றுத்திறன் வீரர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.
இந்த ஆண்டில் குறைந்தபட்சம் 25 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முடிவில், தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக அரசு உறுதியுடன் துணை நிற்கும் என்றும் துணை முதல்வர் உறுதியளித்தார்.