நர்சிங் மாணவர் உட்பட 3 பேர் கைது
நாகர்கோவில், மே 24 : நாகர்கோவிலில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நர்சிங் மாணவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் நேசமணி நகர் எஸ்ஐ விஜயன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை நாகர்கோவில் – பார்வதிபுரம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் மூன்று பேர் நின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதை அடுத்து அவர்களிடம் சோதனை செய்தபோது, அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த 360 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியில் வசிக்கும் பவின் (19), திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த செல்வராஜ் (22), மற்றும் நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 16 வயது இளம் சிறார் என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் திருநெல்வேலியில் இருந்து அடையாளம் தெரியாத நபரிடம் கஞ்சா வாங்கியதாக கூறியுள்ளனர். இவர்களின் செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் இளைஞர்களுக்கு சப்ளை செய்வதற்காக கஞ்சா வைத்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. கைதானவர்களில் பவின் டிப்ளமோ நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.