நாகர்கோவில், நவம்பர் 5:
தமிழ்நாட்டில் 2025 இம் ஆண்டிற்கான 2ம் நிலை காவலர், 2ம் நிலை சிறைத்துறை காவலர், தீயணைப்பு காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுபவர்களுக்காக நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா கல்லூரி, ஆரல்வாய்மொழி ஜெயமாதா பொறியியல் கல்லூரி, தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி, லயோலா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வை நடத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் துணைக் குழு தலைவராக நியமித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் 9ம் தேதி காலை 8 மணி முதல் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். தேர்வு கூட அனுமதிச்சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தினை மாற்றம் ஏதும் செய்ய இயலாது. தேர்வு கூட அனுமதிச்சீட்டினை கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டையினை கொண்டு வருவது உகந்தது. செல்போன், கால்குலேட்டர், பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள், ஸ்மார்ட் கைக்கடிகாரம் தேர்வு எழுதும் முறைக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது. எழுத்துத் தேர்விற்கு வரும்போது கருப்பு நிற பந்து முனை பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வருவது கூடாது. அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளம் www. tn.gov.in/ tnusrb.com லிருந்து அழைப்பு கடிதம் நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு கொண்டுவர வேண்டும்.
தேர்வு கூட நுழைவுச்சீட்டு விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தனது புகைப்படத்தை ஒட்டி அதில் ஏ அல்லது பி பிரிவு அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று வர வேண்டும்.


