இரணியல், மார்- 1
இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் சகாய செல்வராஜ் (55) டெய்லராக உள்ளார். இவருக்கும் நாவல்காடு பகுதி தேவராஜன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. தேவராஜ் கனடா நாட்டிற்கு ஆட்களை அனுப்புவதாக கூறிஉள்ளார். இதை அடுத்து சகாய செல்வராக தனது அண்ணன் மகன் ஆண்ட்ரோ மைக்கேல் ராஜ் என்பவரை கனடாவுக்கு அனுப்ப வேண்டும் என கூறி ரூ.5 லட்சம் பணத்தை தேவராஜ் மனைவி தேவபாய் என்பவரிடம் கொடுக்க கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய சகாய செல்வராஜ் தனது அண்ணன் மனைவி ஜெயச்சந்திர பாய், மகன் ஆன்றோ மைக்கேல்ராஜ் ஆகியோர் சேர்ந்து 5 லட்சம் பணத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொடுத்தனர். பின்னர் வங்கி கணக்கு மூலம் மேலும் ரூ 9 லட்சத்து 90 ஆயிரம் வாங்கியுள்ளனர். மொத்தம் 14 லட்சத்து 90 ஆயிரம் வாங்கிய தேவராஜன் தம்பதி ஆண்ட்ரோ மைக்கேல்ராஜ் வெளிநாட்டுக்கு அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.
இது குறித்து சகாய செல்வராஜ் 2023 ஆம் ஆண்டு இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மாதத்தில் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறியும், திருப்பி கொடுக்கவில்லை.
இதையடுத்து புகார் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இரணியல் போலீசார் தேவராஜன் அவரது மனைவி தேவபாய் ஆகிய இரண்டு மீது வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த கணவன் மனைவி தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.