தென்தாமரைகுளம், பிப். 18: இந்து முன்னணியின் முதல் மாநிலத்தலைவர் மறைந்த பி.தாணுலிங்கநாடாரின் 110-வது பிறந்தநாள் விழா பொற்றையடியில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி மற்றும் தாணுலிங்கம் நாடார் நினைவு இந்து சமூக சேவா அற நம்பகம் சார்பில் காலை 9 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து இருச்சக்கர வாகனப்பேரணி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சத்திவேலன், நெல்லை கோட்டத் தலைவர் தங்க மனோகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா கொடியேற்றினார். எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பேரணியைத் தொடங்கி வைத்தார்.
இப்பேரணி கோட்டாறு, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு வழியாக பொற்றையடியில் நிறைவடைந்தது. அங்கு காலை 11 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்ற து. இந்நிகழ்வுக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் வழக்கறிஞர் எஸ்.பி.அசோகன் வரவேற்றார். மாவட்ட ஆலோசகர்கள் செல்லன், மிஷா சோமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சாமிதோப்பு அன்பாலயம் நிறுவனர் சிவச்சந்திர சுவாமிகள், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் சி.சுபாஷ் விஜயன் நன்றி கூறினார். தொடர்ந்து பிரார்த்தனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தாணு லிங்க நாடாரின் உறவினர்கள் மற்றும் இந்து இயக்கங்களின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் .