தஞ்சாவூர், மே 20 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்த கோரி பல்வேறு இடங்களில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் வேலையை உடனே தொடங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு சட்டப்படி கூலி ரூபாய் 336 ஐ குறைக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டன.
திருவையாறு ஒன்றியம் காருகுடியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆர் பிரதீப் ராஜ்குமார், விளாங்குடியில் சங்கத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் செந்தாமரை செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தியாகராஜன், கலியபெருமாள், ஜானகி, பரமேஸ்வரி, சிவகாமி, பரமேஸ்வரி, திவ்யகுமாரி உள்பட ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



