நாகர்கோவில் ஜூலை 17
தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண்: 20691) ஜூலை 23 முதல் ஜூலை 31 வரையும், நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஜூலை 22 முதல் ஜூலை 31 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 24, 28, 29, 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரயில் (22657) சென்னை எழும்பூரில் இருந்தும், ஜூலை 22, 23, 25, 29, 30 ஆகிய நாட்களில் மாலை 04.30 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் (22658) சென்னை எழும்பூர் வரையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவு இல்லா அந்தியோதயா விரைவு ரயில் வரப் பிரசாதமாக உள்ளது.இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து புறப்படும் அல்லது செல்லும் ரயில் சேவைகளை ஜூலை 22 முதல் ஜூலை 31 வரை 10 நாட்களுக்கு பல மாற்றங்கள் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவு இல்லா அந்தியோதயா விரைவு ரயில் 10 நாட்களுக்கும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. முற்றிலும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட இந்த ரயில் நெல்லை, மதுரை, திருச்சி மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் சேவை தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை தாம்பரம் செல்லும் பல்வேறு ரயில்கள் பகுதி தூரம் ரத்து, ஒரு சில ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, மாற்று வழியிலும் இயக்கப்பட உள்ளன. எனவே தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் செல்லும் பயணிகள் ரயில்கள் இயக்கம் குறித்த முழு விபரங்களை அறிந்து கொண்டு பயணிக்குமாறு தெற்கு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாக காரணங்களை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை(06012) ரத்து செய்தது. அதேபோல் 15ம் தேதியன்று சென்னையில் இருந்து காலை 7.45 மணிக்கு நாகர்கோவிலுக்கு வரும் சிறப்பு ரயிலும் ரத்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.