திருப்பத்தூர், ஜூலை 4 –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சியின் வாயிலாக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்ககம் திட்டத்தினை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்புகள், பழ செடி தொகுப்புகள் மற்றும் பயிறு வகைத் தொகுப்புகள் வழங்கினார். மேலும் திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாபர்டு வங்கி நிதி மற்றும் கிடங்கு ஊடக அமைப்பு கட்டமைப்பு நிதி உதவியுடன் ரூபாய் 1.60 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு மற்றும் திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள உழவர் சந்தை வளாகத்தில் தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் ரூ.84 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் வேளாண் ஆலோசனை மையத்தை திறந்து வைத்தார்கள். அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மிட்டாளம் அரசு பள்ளிக்கு அருகே நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்தரவல்லி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு வேளாண் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் விதைத்தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு தொகுப்பு என மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ.4.36 இலட்சம் மதிப்பிலான பல்வேறு தொகுப்புகளை வழங்கினார்கள். உடன் தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் தீபா, மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், விட்டாலும் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.