வேலூர், ஜூலை 09 –
வேலூரில் கடந்த 25-ம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்த 198 கோடியில் கட்டப்பட்ட அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முழுவதுமான கட்டுமான பணிகள் முடிவடையாமலும் போதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லாத நிலையில் திறக்கப்பட்டதாக தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இன்று நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு உள்பட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதில் வேலூர் அண்ணா சாலையில் அந்தந்த பகுதிகளில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.
மேலும் சாலையில் நடந்து சென்ற கருப்பு சட்டை மற்றும் அதிமுக வேட்டி அணிந்து சென்ற பொது மக்களையும் விரட்டி விரட்டி கைது செய்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக வேலூர் அண்ணா சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.