விழுப்புரம், ஆகஸ்ட் 19 –
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் வானூர் வட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு
வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் திண்டிவனம் வட்டம், ஓமந்தூர் கிராமத்தில் ஒ.பி.ஆர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்விளையாட்டரங்கில் 400 மீட்டர் 8 வழி மண் தடகள பாதை, உடற்பயிற்சிக்கூடம், உடை மாற்றும் அறைகள், கூடைபந்து, கைப்பந்து மைதானம் மற்றும் கோ கோ விளையாட்டு மைதானம் உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
தொடர்ந்து வானூர் வட்டம், தென்கொடிப்பாக்கம் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கான இடத்தேர்வு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வானூர் ஊராட்சி ஒன்றியம் பேராவூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகள் வீடு கட்டி வருவதை நேரில் பார்வையிட்டதுடன் அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டுமானம் நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்டதுடன் பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதேபகுதியில் கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை நிதியின்கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் 143 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நல்லாவூர் ஊராட்சியில் அமைந்துள்ள 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை நேரில் பார்வையிட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்பட்ட நாள் மற்றும் குளோரினேஷன் மேற்கொள்ளப்பட்ட விவரத்தினை கேட்டறிந்ததுடன் பொதுமக்களுக்கான குடிநீர் சரியான அளவில் குளோரினேஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து நல்லாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டதுடன் மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு சமையற்கூடத்தில் மதிய உணவு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களின் இருப்பு பதிவேடுகளையும் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் பதிவேடுகளை பார்வையிட்டதுடன் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கிளியனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் வீடு கட்டி வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து திருச்சிற்றம்பலத்தில் மினி டைடல் பூங்கா மற்றும் வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரி செல்லும் சாலை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் சாலையின் இருபுறங்களிலும் மின் விளக்கு வசதிகள், மரங்கள் நட்டு பராமரித்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
ஆய்வின்போது திண்டிவனம் சார் ஆட்சியர் அ.ல. ஆகாஷ், ஊரக (சிப்காட்) வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன், தனித்துணை ஆட்சியர் விஜயா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் ஆழிவாசன், திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் யுவராஜ், வானூர் வருவாய் வட்டாட்சியர் வித்யாதரன், மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச்செல்வன், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், சுபாஷ்சந்திரபோஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



