விளாத்திகுளம், ஜூலை 24 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடல்குடி கிராமத்தில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டுவதற்காகவும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் ₹9,80,000 மதிப்பீட்டில் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு கட்டுவதற்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மல்லீஸ்வராபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடை கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதன் பின்னர் இடைச்சியூரணி கிராமத்தில் அனைத்து கிராமம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 16 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின் போது ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன் வெங்கடாசலம், புதூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வெம்பூரார், செல்வகுமார் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.