விளாத்திகுளம், ஆகஸ்ட் 08 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் எனும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, தொழில் வரி விதிப்பு, மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வியாபாரிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட 16 துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகைகள் தமிழக அரசு சார்பில் முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் வைப்பார், கலைஞானபுரம், சிப்பிகுளம், கீழவைப்பார், கல்லூரணி, கோட்டைமேடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் முகாமில் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை மற்றும் மகளிர் உரிமைத்தொகை போன்ற துறைகளில் மனுக்கள் சரியாகப் பதியப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ரஞ்சித் மற்றும் வட்டாட்சியர் கண்ணன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.