பரமக்குடி, ஆக.8 –
விதை விற்பனையாளர்கள் விதைச் சட்டத்தின்படி விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விதை விற்பனைக்கு உரிய உரிமம் பெற்று நிறுவனத்தில் காட்சிப்படுத்த வேண்டும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விதைகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். விலைப்பட்டியல் நிறுவனத்தின் முகப்பில் வைக்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம் மற்றும் தனியார் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவு சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கையின் நகல் ஆகியவற்றை உற்பத்தியாளரிடம் இருந்து தவறாமல் பெற்று ஆய்வின் போது வழங்க வேண்டும்.
விற்பனையாளர்கள் ஒரு ரகத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதனை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்யப்படும் விதைகள் மாவட்டத்தின் பருவத்திற்கு உகந்ததாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதை வாங்கியதற்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும். விவசாயிகள் விற்பனை ரசீதில் பெயர், முகவரி, பயிர், ரகம், சான்று நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகிய விபரங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதனை உறுதிசெய்து விற்பனை ரசீது பெற்று பராமரிக்க வேண்டும்.
மேலும், விதைச்சட்டம், விதைக்கட்டுப்பாட்டு ஆணையின்படி விதைகளை விற்பனை செய்ய வேண்டும். விதை ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு சந்தேகங்கள் இருப்பின் தெளிவுரை பெறலாம். மேற்கூறியபடி விதை விற்பனை மேற்கொள்ளாத விதை விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1985 ஆகியவற்றின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா உடனிருந்தார்.


