தஞ்சாவூர், செப்.18.
தஞ்சாவூரில் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி ஆலோசகர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மதிப்பீட்டாளர்களுக்கான புதிய வருமான வரி சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ராஜராஜேஸ்வரி தலைமை தாங்கினார். 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிச் சட்டத்துக்கு பதிலாக புதிய வருமான வரிச் சட்டம் 2025, 2026 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதிய சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்துள்ள வருமான வரி ஆலோசகர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மதிப்பீட்டாளர்கள் தங்களது பதிவை புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்கான கடைசி தேதி செப்.30 என்றும் தெரிவிக்கப்பட்டது. பதிவு புதுப்பிப்பதற்கான படிவம் இணையதளத்தில் கிடைக்காத நிலையில், அச்சு வடிவில் பூர்த்தி செய்து மதுரையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
மேலும், வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண்கள் உள்ளிட்ட தொடர்பு விவரங்களை சரிபார்த்து புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்பு விவரங்கள் தவறாக இருந்தால் வருமான வரித்துறையின் முக்கிய அறிவிப்புகள் முறையாக சென்றடையாமல் போகும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
சுய மதிப்பீட்டு வரியை மட்டும் நம்பாமல், உரிய காலத்தில் முன்கூட்டியே வரியை தவணை முறையில் செலுத்துவது குறித்து வாடிக்கையாளர்களிடம் வரி ஆலோசகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூடுதல் ஆணையர் ராஜராஜேஸ்வரி வலியுறுத்தினார். முன்கூட்டியே வரி செலுத்தாமல் தாமதப்படுத்துவதால் ஏற்படும் வட்டி மற்றும் பிற நிதிச்சுமைகள் குறித்து பலருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் புதிய வருமான வரிச் சட்டம் 2025 மற்றும் வருமான வரி விதிகள் தொடர்பாக வருமான வரித்துறை துணை ஆணையர் வெங்கடேசன் விளக்கம் அளித்தார். தஞ்சாவூர் வரி ஆலோசகர் கூட்டமைப்பு தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் தியாகராஜன், பொருளாளர் லட்சுமணன், துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், வருமான வரி அலுவலர்கள் லட்சுமணன், சிவானந்தம், சைலேஷ் மற்றும் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளைச் சேர்ந்த வரி நடைமுறையாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக வருமான வரி அலுவலர் வில் விஜயன் வரவேற்றார். நிறைவில் வருமான வரி ஆய்வாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.



