மார்த்தாண்டம், செப். 8-
குழித்துறை ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர் ஜோதி விருது வழங்கும் விழா வைகுண்டபுரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஸ்ரீநாகேஷ் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணதாஸ், அம்மாவன் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியை கீதா இறைவணக்கமும், ஆசிரியர் லாரன்ஸ் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினர். ஆசிரியை பிரெம்மியா தேவி வரவேற்புரையாற்றினார். ரோட்டரி துணை ஆளுநர் ரெகுபதி, மூடோடு சிக்மா கட்டிடக்கலை கல்லூரி தலைவர் முனைவர் ஜேம்ஸ் வில்சன், பள்ளி தாளாளர் துரைமணி, செயலாளர் பாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெக்சிலால், துணை முதல்வர் ஸ்மிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை அர்ச்சனா குழுவினரின் பாடலும், ஆசிரியை ஆன்சி அல்பினின் கவிதையும் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தன.
5 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் ஜோதி விருது
விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜெசிந்தா தர்மா கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றி வரும் 5 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் ஜோதி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
காட்டாத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்த், புலியூர்சாலை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஷைன்ஸ், பாத்திரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மார்க்கிரட், கண்ணாட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜெஸ்டின், வைகுண்டபுரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆஷா ஆகியோர் விருதுகளை பெற்றனர்.
மேலும், ஒரே பள்ளியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கன்னியாகுமரி முதல் லடாக் வரை இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட பென்சிகர், ரெகு ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
விருது பெற்ற ஆசிரியர்களை உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் பொருளாளர் பாஸ்கரன், துணைத்தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர். நிகழ்ச்சியை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பேராசிரியர் சஜீவ் தொகுத்து வழங்கினார். நிறைவாக ஆசிரியை மீனுஸ்ரீ நன்றி கூறினார்.



