சுசீந்திரம், ஜுலை 12 –
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நகர்ப்புறம் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பொது மக்களையும் வீடுகளுக்கே சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் விபரங்கள் அனைத்தும் சேகரித்து அரசின் பிரத்தியேக செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இந்த பணியினை கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிவிளை பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைவர் திருமதி அழகுமீனா ஐஏஎஸ் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த கணக்கெடுப்பு பணியானது செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டியதால் பொதுமக்கள் உங்கள் இல்லம் தேடி வரும் களப்பணியாளர்களுக்கு ஆதரவு வழங்கி சுய விபரங்களை வழங்கிட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். மாவட்ட முழுவதும் 170 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் 17 ஓரிட சேவை மையங்கள் நிறுவப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான சேவைகள் வீடுகளுக்கே வந்து சேரும் வகையில் இத்திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. இம்மையங்களில் பேச்சு பயிற்சி, பிசியோதெரபி, மனநல ஆலோசனை, சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி ஆகியவை வல்லுனர்களால் வழங்கப்பட உள்ளது.
இதனால் கடை கோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயனடைவார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு தினேஷ் சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் திரு ராம் சிவா, மறுவாழ்வு அலுவலர் பவித்ரா மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.