மார்த்தாண்டம், ஜூலை 18 –
மார்த்தாண்டம் அருகே பிடாரம்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (59). இவரது மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மருமகன் வெளியூரில் சென்று விட்டார். இதனால் அவரது பேரன் மெர்வின் (13) என்ற சிறுவனை தன்னுடன் வளர்த்து வந்தார். மெர்வின் உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்த பின்னர் பள்ளிக்கூட மைதானத்தில் நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மெர்வின் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த சக மாணவர்கள் அவரை எழுப்ப முயற்சித்தும் மெர்வின் பேச்சு மூச்சின்றி கிடந்தார். உடனடி பள்ளி நிர்வாகிகள் மாணவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் மெர்வின் கபடி விளையாடிய போது தவறு விழுந்து அடிபட்டதில் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


