ஈரோடு, ஜூன் 28 –
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி ஈரோட்டில் நேற்று காலை போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஈரோடு வ.ஊ.சி பூங்கா மைதானம் அருகே இருந்து புறப்பட்ட இந்த பேரணியை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. குடிக்காதே குடிக்காதே கள்ளச்சாராயம் குடிக்காதே. கள்ளச்சாராயம் குடித்தால் மரணம் ஏற்படும். ஆண்மை பாதிக்கும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி வரப்பட்டன.
பேரணியில் முதன்மை கல்வி அலுவலர் அப்பா ராவ் மது விலக்கு டி.எஸ்.பி சண்முகம், கலால் உதவி ஆணையர் தியாகராஜன், ஈரோடு கலால் தாசில்தார் கதிர் வேல் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்கள், பிரம்ம குமாரிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.