திங்கள்சந்தை, அக். 6 –
நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வில்லுக்குறி குருசடி ஜங்ஷனில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மாடத்தட்டுவிளை என்ற கிராமம் உள்ளது. கண்தான கிராமம் என அழைக்கப்படும் இந்த கிராமத்தில் சுமார் 15,000 மக்கள் வரை வசித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட இந்த ஊர் வழியாக எந்த அரசு பஸ் வசதியும் இல்லை.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வழியாக அரசு பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக இந்த மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியினர் பிரின்ஸ் எம்எல்ஏவிடமும், திமுகவினர் அமைச்சர் மனோ தங்கராஜிடமும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மடத்தட்டுவிளை ஆலயம் வழியாக அரசு பஸ் இயக்க அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் 11ஏ மகளிர் விடியல் பயணம் இலவச அரசு பஸ்ஸை வில்லுக்குறி பாலத்தில் இருந்து குதிரைப்பந்திவிளை, மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம், சூசைமிக்கேல் அடிகளார் சாலை வழியாக தனியார் பிஎட் கல்லூரி சென்று வில்லுக்குறி குருசடி ஜங்ஷன் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து புதிய வழித்தட அரசு பஸ் போக்குவரத்து தொடக்க விழா நேற்று நடந்தது.
மாடத்தட்டுவிளை ஆலயம் முன்பு நடந்த இந்த விழாவில் பங்குத்தந்தை அருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமை வகித்தார். பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் பால் ததேயுஸ், செயலர் மேரி ஸ்டெல்லாபாய், பொருளாளர் சார்லஸ், திங்கள்நகர் கிளை மேலாளர் ரதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரின்ஸ் எம்எல்ஏ கலந்துகொண்டு கொடியசைத்து அரசு பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேடி உதயம், காங்கிரஸ் நிர்வாகிகள் பிரகாஷ் தாஸ், ஜோசப்ராஜ், சேவியர், மங்களம், பெலிக்ஸ் ராஜன் மற்றும் முன்னாள் மாடத்தட்டுவிளை பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர்கள் ஜோசப் ராஜ், அகஸ்டின், எட்வின் சேவியர் செல்வன், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பங்கு அருட்பணி பேரவை துணை செயலாளர் ஜோஸ் வால்டின் நன்றி கூறினார்.



