குளச்சல், மார். 11 –
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. மாசிக்கொடை விழாவில் தினமும் அம்மனுக்கு அலங்கார தீபாராதனை அம்மன் தங்க தேர் உலா வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வந்தது.
இந்த விழாவில் தினம் தோறும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்தும் பொங்கலிட்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
நேற்று செவ்வாய் கிழமை மாசிக்கொடை விழா இறுதி நாளான 10வது நாள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் வழங்கப்பட்டது. இது போல தமிழகம் கேரளாவில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படிருந்தது. இதனையடுத்து அதிகாலை முதலே மண்டைக்காட்டில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
திருவிழாவின் இறுதி நாள் நள்ளிரவு மறைவான இடத்தில் தயாரிக்கப்பட்ட பதினொன்று வகையான உணவு பதார்த்தங்கள் மண் பானையில் வெள்ளை துணியால் மறைத்து கோயில் அர்ச்சகர்களால் பவனியாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு படைக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. ஒடுக்கு பூஜையில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
முக்கிய நிகழ்வான ஒடுக்கு பூஜையின் போது பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் 1200 க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பத்து நாட்கள் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர்.



