குளச்சல், அக். 4 –
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில்
மணவாளக்குறிச்சி, வெள்ளிமலை, மண்டைக்காடு, கல்லுக்கூட்டம், ரீத்தாபுரம், திங்கள்நகர், நெய்யூர், வில்லுகுறி ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கும், முட்டம், வெள்ளிச்சந்தை, சைமன்காலனி, ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கும், குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் – 9 ம் கட்ட முகாம் மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் இன்று (04.10.2025) நடைபெற்றது.
இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா குத்துவிளக்குகேற்றி துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 4 மணி வரை நடைபெற்றது. மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கி மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து, உயர் பரிசோதனைகளும் செய்தனர். உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
இந்த முகாமில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி, துணை இயக்குநர்கள் மரு.ரவிக்குமார் (குடும்பநலம்), மரு.கிரிஜா (தொழுநோய்), முகாம் ஒருங்கிணைப்பாளர் மரு.பிவீனா, துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.



