திருப்புவனம், ஆகஸ்ட் 07 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினசரி வருகை தருவது வழக்கம். கோயில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்த ஒன்பது நிரந்தர உண்டியல்களும், ஒரு கோசாலை உண்டியலும் உள்ளது. இதில் கிடைக்கும் பக்தர்களின் காணிக்கைகளை 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கம் வெள்ளி, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எண்ணப்படும்.
அந்த வகையில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம், தங்க நகை, வெள்ளி ஆபரணம் ஆகியவற்றை எண்ணும் பணி சிவகங்கை துணை ஆணையர் சங்கர் தலைமையில் உதவி ஆணையர்கள் கவிதா, கணபதி முருகன் மேற்பார்வையில் நடைபெற்றது. அப்போது உண்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மஞ்சள் துணியில் 230 புத்தம் புதிய நாணயங்களை காணிக்கையாக செலுத்தியிருந்தார்.
திர்ஹாம் எனப்படும் நாணயங்களை பக்தர் உண்டியலில் செலுத்தியிருந்தார். பொதுவாக வெளி நாட்டு ரூபாய் நோட்டுகள் தான் காணிக்கையாக செலுத்தப்படும். முதன் முறையாக ஒரே பக்தர் நாணயங்களாக செலுத்தியுள்ளார். இதுதவிர சிங்கப்பூர், மலேசியா நாடுகளைச் சேர்ந்த 234 ரூபாய் நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.