தஞ்சாவூர், ஆகஸ்ட் 7 –
மக்கள் நல திட்டங்களை அதிமுக வினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கின்றனர் என அமைச்சர் டி ஆர் பி ராஜா கூறினார். திமுக மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்ட அண்ணா அறிவகம் என்கிற செயல்பாட்டு அறை திறப்பு விழா நடந்தது. இதை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் மத்திய மாவட்டசெயலாளர் துரை சந்திரசேகரன் எம் எல் ஏ, டி கே ஜி நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா, மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்தலாம் எனக் கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு ரூபாய் 10 லட்சம் சுப்ரீம் கோர்ட் அபராதம் விதித்ததை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அமைச்சர் டி ஆர் பி ராஜா கூறியதாவது: அவருக்கு அரசியல் தெளிவு பிறந்து இருக்கும் என நம்புகிறேன். அந்த மாதிரி எண்ண ஓட்டங்களை பற்றி பேசுவதையே தரக்குறைவாக நினைக்கிறேன். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பெயரை போட்டு நிறைய திட்டங்களை செய்தார்கள். அதையும் அவர்கள் செய்யக்கூடாது என்று நினைக்கிறார்களா? ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருக்கே துரோகம் செய்யக் கூடிய ஒட்டுமொத்த கூட்டமாக தான் அந்த கூடாரம் திகழ்கிறது.
அதில் சி.வி சண்முகம் பிரதானமான உதாரணமாக இருப்பதாக தெரிகிறது. அதற்கு சரியான பதிலடி சுப்ரீம் கோர்ட் வழங்கி இருக்கிறது. திராவிடர் நாயகன் செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களை பார்த்து வயிற்றெரிச்சல், பொறாமை. அவர்கள் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் போது நாட்டுக்கும், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இப்போது செய்கிறவர்களையும் ஏதாவது பொய் சொல்லி மக்கள் நல திட்டங்களை நிறுத்த முயற்சி செய்வது மிக கேவலமானது. அதற்கு சரியான நியாயத்தை சுப்ரீம் கோர்ட் வழங்கி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.